கைலாயன் என்ற நான்….

வாசகர்களுக்கு என் அன்பு கனிந்த வணக்கங்கள்!!

 தூரிகையில் வண்ணம், மகவின் அழுகுரல்,

மேகத்தின் தோற்றம், மழையின் துளிகள்.

இவை அத்துனையும் தூய்மையின் சாராம்சங்கள். ஒரு மரத்தின் இலைகள் நமக்காக உதிர்வதில்லை. அதை மிதிக்கும் நாம் மரத்திடம் மன்னிக்க வேண்டுவதில்லை. யாக்கையின் ‘பயணம்’ வாழ்க்கையின் காலடியில் அவ்வப்பொழுது மிதிப்படுகிறது. அதனால் மகிழ்ச்சி அடைகிறோம்! அதை ‘யதார்த்தம்’ என்றும் ‘பயணம்’ என்றும் முத்திரையிட்டு அழைக்கிறோம்.

கவிப்பேரரசுகள் பயணித்து கொண்டிருக்கும் இந்த பாரத மண்ணில், சற்றே சிரம் தாழ்த்தி, நானும் உங்கள் வாழ்த்துக்களோடு என் கவிதை பயணத்தை துவங்குகிறேன். இயற்கையின் படைப்புகளை நாம் வெவ்வேறு கோணங்களிலிருந்து காண்கிறோம். அவை நித்தம், நித்தம் பூடகமாக பல கவிதைகளை சொல்ல முயல்கிறது.

விரிந்து பறக்கும் பருந்தைக்கண்டு ‘வீரம்’ என்று வர்ணித்தோம், ‘வேட்டை’ என்று கவனித்தோம், ‘விருந்து’ என்று கெக்கலித்தோம். அதனைக்கண்டு ஒரு குழந்தை சிரித்தது. அதன் ‘எதனை’ கண்டு!? எவரும் அறியார். அதுதான் கவிதை. அரூபமாய் சந்தகுழியில் சரிந்து விழுந்து, சிந்தனை பற்களால் அசை போடப்பட்டு, மானுட கற்பனையால் மடிக்கபட்டு, எதுகை மோனையால் மெருகேற்றப்படும் அந்த ‘நிலை’தான் கவிதை!

அது வேட்டை நாய்களான சொற்களால் துரத்தப்படுகிறது. இரும்பு கடிவாளங்களான எழுதுகோலால் அடக்கப்படுகிறது. வேலியான வெற்று காகிதங்களால் வளைக்கப்படுகிறது. இருப்பினும்…அந்த உயர்ந்த நிலையை ஆத்மார்த்தமாக உள்ளிழுத்து, உருவகித்து, இவ்வுலகிற்கு உயிரோடு படைக்கும் கவிஞர்களே!! உங்களை நித்தம் இயற்ற தூண்டும் வாசகர்களே! தங்களது பொன்னான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு சிறுவன் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை எவ்வாறு உணர்கிறான்? வாயற்ற சாலையோர மைல் கல், இருளினுள் கிடக்கும் வெற்றிடங்கள், செவியற்ற வெங்காயத்தாமரை குளம் மற்றும் அழிந்துகொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள்…இவை நமக்கு என்ன கூற முயல்கிறது?? என்பதை, எவரும் பொறுப்படுத்தாத ஒரு ‘தட்டானை’போல் உங்களிடம் படைக்கிறேன்.

இது உங்கள் ஆழ் மனதின் பிரதிபலிப்பே!

என் கவிதைகளுக்கு முன்னோடியாக விளங்கிய திரு. சுந்தர ராமசாமி இன்றும் சுவாசித்து கொண்டிருக்கிறார்! இதுவரை நான் கண்டிடாத அந்த ‘விதிர்க்கு’ என் எழுத்துக்களை சமர்ப்பிக்கிறேன். மேலும் என் கவித்திறமையை ஊக்குவித்த பேராசிரியர் கா. மதியழகன் (தமிழ்த்துறை தலைவர், எஸ். ஆர். எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கட்கு நன்றி குவியல்கள்!!

வேறொன்றும் பேச மார்க்கம் அறியேன்…

என்றும் அன்புடன்,

கைலாயன்.

selfie